ஆசிரியை தலைமுடியை இழுத்து மாணவர்கள் அராஜகம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 10, 2023

ஆசிரியை தலைமுடியை இழுத்து மாணவர்கள் அராஜகம்

 



அரசு பள்ளி ஆசிரியை, மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


டிச.6ம் தேதி திருப்பூர், நல்லுார் அருகேயுள்ள விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியை ரேவதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.


அப்போது இரு மாணவர்கள் பேனாவை வைத்து சண்டையிட்டனர். இதை தடுத்த ரேவதி, பேனாவை வாங்கி மூடி போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாணவர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்து, ஆசிரியையை சுவற்றில் மோத வைத்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இந்திய பள்ளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்புஉள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், தலைமை வகித்து பேசுகையில், ''ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை, தமிழக அரசு அடக்கி வைக்க முயற்சிக்கிறதே தவிர, பிரச்னைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவது இல்லை. விஜயாபுரம் பள்ளியில் ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம் நடந்து, மூன்று நாட்களாகியும், அதை மூடி மறைக்கத்தான் பார்க்கின்றனர்,'' என்றார்.


ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆசிரியை தாக்கப்பட்டதும், சக ஆசிரியர்கள், தலைமையாசிரியை, உதவி தலைமையாசிரியர்கள் என அனைவரும் அந்த வகுப்பறைக்கு சென்று, அவருக்கு ஆறுதல் கூறினர்.


'பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்களுக்கு தகவல் சொல்ல, அவர்களும் விரைவாக பள்ளிக்கு வந்தனர். நல்லுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.


'தாக்குதல் நடத்திய மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றனர்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''ஆசிரியை தாக்கப்பட்ட புகார் தொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


போலீஸ் அதிகாரி விளக்கம்


நல்லுார் உதவி போலீஸ் கமிஷனர் நந்தினியிடம் கேட்டபோது, ''விஜயாபுரம் அரசுப்பள்ளியில் நடந்த பிரச்னை தொடர்பாக விசாரித்தோம்; ஆசிரியை தரப்பிலோ, பள்ளி தரப்பிலோ புகார் அளிக்க வில்லை. தங்களுக்குள் பேசி தீர்வு காண்பதாக தெரிவித்தனர். புகார் கொடுத்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுத்திருப்போம்'' என்றார்.


போதை காரணமா


கூட்டத்தில் பேசிய ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், 'மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். போதைப் பொருட்கள் தடையின்றி, மாணவர்களுக்கு கிடைக்கிறது. இப்பழக்கத்தால், மாணவர்கள், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளி அருகில் போதைப் பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என்றனர்.


Post Top Ad