சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள், சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் என மொத்தம் 1506 பேருக்கு ரூ.87 இலட்சம் கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகையினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார்.
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (12.10.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் என மொத்தம் 1506 மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு ரூ.87 இலட்சத்து 44ஆயிரத்து 500 கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பசுமைப் பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர், சென்னை பள்ளிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்த வீடியோ குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக சென்னை பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள், அரசு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோருக்கு இன்று உதவித் தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளிகளில் மாணவர்கள் எளிதில் கல்வி பயிலும் வகையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பள்ளியில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் மிகவும் திறமையானவர்களாகவும் உள்ளனர். மாணவ, மாணவியர் தற்பொழுது உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் சிறக்க வேண்டும்.
இதற்கு தமிழ்நாடு அரசு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்து உதவிபுரியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும், குறிப்பாக சீர்மிகு வள வகுப்பறைகள் தற்பொழுது ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை மேயராக இருந்தபோது சென்னை பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்று கலைஞர் அவர்களிடம் சொன்னார்.
மேலும், அவர் மேயராக இருந்தபோது மாநகராட்சி பள்ளிகளில் ஏற்படுத்தி தந்த அனைத்து வசதிகள், ஆசிரியர்கள், பள்ளிக் கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக தற்பொழுது ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் கல்விக்கென்று தனிக்கவனம் செலுத்தி அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;மார்ச் 2023 அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பில் 324 மாணவர்களுக்கு ரூ.4,84,500, 12ஆம் வகுப்பில் 383 மாணவர்களுக்கு ரூ.11,78,000 பாடப்பிரிவில் சிறப்பு மதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களில் 10ஆம் வகுப்பில் 204 ஆசிரியர்களுக்கு ரூ.6,07,500, 12ஆம் வகுப்பில் 277 ஆசிரியர்களுக்கு ரூ.7,24,500, தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து கொடுத்த 13 தலைமையாசிரியர்களுக்கு ரூ.70,000 என மொத்தம் 707 மாணவர்கள் மற்றும் 494 ஆசிரியர்களுக்கு ரூ.30,64,500 ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், சென்னை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்று 2022-2023ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் 1 மாணவருக்கு ரூ.45,000, பொறியியல் பயிலும் 87 மாணவர்களுக்கு ரூ.39,15,000, கலை மற்றும் அறிவியல் பயிலும் 150 மாணவர்களுக்கு ரூ.10,50,000, செவிலியர் பயிற்சி பயிலும் 38 மாணவர்களுக்கு ரூ.3,80,000, பட்டயப்படிப்பு பயிலும் 24 மாணவர்களுக்கு ரூ.2,40,000, சட்டப்படிப்பு பயிலும் 5 மாணவர்களுக்கு ரூ.50,000 என மொத்தம் 305 மாணவர்களுக்கு ரூ.56,80,000 முதலாம் ஆண்டு கல்வி உதவித் தொகையும் இன்று வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, சேவைத்துறைகளின் சார்பில் 2 மாத காலங்களுக்கு சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதியதாக சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளாமல், ஏற்கனவே சாலை வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை சீரமைக்கும் பணிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் பூந்தமல்லி பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,877 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன.
தினந்தோறும் சராசரியாக 70 சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழைக்கு முன்னதாக இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும்.
மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
ந்நிகழ்ச்சியில், மேயர் பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம் அவர்கள், நிலைக்குழுத் தலைவர் த.விசுவநாதன் (கல்வி) அவர்கள், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு (பணிகள்) அவர்கள், தா.இளையஅருணா (நகரமைப்பு) அவர்கள், டாக்டர் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்) அவர்கள், சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி) அவர்கள் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment