தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார்.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் யசோதா. ஆங்கில ஆசிரியையான இவர், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்துக்கு உதவும் நோக்கில் பிரதமர் மோடி உருவாக்கியுள்ள இயக்கம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
இதற்காக அவரைப் பாராட்டி உள்ளார் பிரதமர் மோடி.
ஆசிரியை யசோதாவுக்கு தமிழில் அனுப்பியுள்ள கடிதத்தில், “நாட்டின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்த உங்கள் கருத்துக்கள் முக்கியமானவை. ஒரு மாணவனின் வாழ்க்கையில் வழிகாட்டியாக கனவுகள் காண கற்றுக் கொடுத்து அந்தக் கனவினை குறிக்கோள்களாக மாற்றி அவற்றை நிறைவேற்ற வைக்கும் ஆற்றல் மிக்கவர்கள் ஆசிரியர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடையே நேர்மறை உணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்கள் வழிகாட்டுவதாகவும் மாறிவரும் இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட பல வாய்ப்புகள் இளையர்களுக்கு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
“மாணவர்களின் கனவுகளை நனவாக்க ஊக்குவிப்பதிலும் அவர்களின் திறன்களை சிறப்பாக பயன்படுத்துவதிலும் இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களின் விலை மதிப்பற்ற வழிகாட்டுதல் தீர்க்கமானதாக இருக்கும்,” எனப் பிரதமர் மோடி தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியை யசோதாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய தமது வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment