புதிய பள்ளி கல்வித்துறை செயலருக்கு உள்ள சவால்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 19, 2023

புதிய பள்ளி கல்வித்துறை செயலருக்கு உள்ள சவால்கள்

 பள்ளி கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள குமரகுருபரன், ஆசிரியர்களை மனஉளைச்சலில் இருந்து மீட்டு வகுப்பறைகளில் சுதந்திரமான கற்பித்தல் நடப்பதற்கு துணை நிற்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


'கல்வியும், சுகாதாரமும் தி.மு.க., ஆட்சியின் இரு கண்கள்' என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் இத்துறைகளில் தான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டங்கள், கைது என காட்சிகள் அரங்கேறி வருகின்றன. 


குறிப்பாக சம்பள முரண்பாட்டை நீக்க கோரி இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதம், பணிநிரந்தரம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் எதிரொலியாக ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டது. இது தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆசிரியர்களுடனான சமூக உறவை தொடர முயற்சிக்கவே குமரகுருபரன் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆசிரியர்கள் கூறியதாவது:

இத்துறையில் 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலை சந்திக்கின்றனர். குறிப்பாக 'எமிஸில்' மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு முதல் மதிப்பெண், நலத்திட்டங்கள் என 50க்கும் மேற்பட்ட பதிவேற்றங்களை இத்தளத்தில் ஆசிரியரே மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் கற்பித்தல் நேரம் காவு கொடுக்கப்படுகிறது. இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


ஒரே வகை பதிவுகளை ஒரே நேரத்தில் முயற்சிக்கும் போது 'சர்வர்' பிரச்னை ஏற்படுகிறது. இருப்பினும் பதிவேற்றத்திற்காக ஆசிரியர்கள் வகுப்பறைகளில் 'அலைபேசியும் கையுமாகவே' இருக்க வேண்டியுள்ளது. இத்துடன் 10க்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரிப்பும் சேர்ந்துகொள்வதால் மனஉளைச்சல் ஏற்படுகிறது.


'எமிஸ்' பதிவேற்றங்களுக்காக மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதனால் நேரம் காலம் பார்க்காமல் ஆசிரியர்களை பதிவேற்றம் செய்ய அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இதற்கு தனி அலுவலர்கள் நியமிக்க வேண்டும். செயலி மூலம் 'அப்சர்வேஷன்' என்ற பெயரில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிப்பது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. 


இதில் 38 கேள்விகளுக்கு ஆசிரியரிடம் பதில் பெறுகின்றனர். இந்த செயலி 'அப்சர்வேஷனில்' ஆசிரியர்களை குற்றம் சொல்லும் வகையிலேயே அதிகாரிகள் - ஆசிரியர் உறவு உள்ளது. 


இதில் மாற்றம் வேண்டும். எண்ணும் எழுத்து திட்டத்தில் ஆன்லைன் தேர்வுக்கு ஒரு நாள் வீணாகிறது. இத்திட்டமே தேவையில்லை. 50 சதவீத்திற்கும் கீழ் தேர்ச்சி காட்டும் ஆசிரியர்களிடம் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாத உண்மையான நிலவரம் குறித்து ஆலோசிக்க வேண்டும், என்றனர்.


Post Top Ad