ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித் துறை புதிய திட்டம் - Asiriyar.Net

Thursday, October 19, 2023

ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித் துறை புதிய திட்டம்

 



ஆசிரியர்களின் துறைரீதியானகோரிக்கைகளுக்கு  தீர்வு காண புதிய  நடைமுறையை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் பதவி உயர்வு, பணி மூப்பு குளறுபடிகள் தொடர்பாக போராட்டம், வழக்குகள் போன்ற செயல்பாடுகளை அவ்வப்போது முன்னெடுக்கின்றன. இதை சரிசெய்வதே கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலாக மாறிவிட்டது. 


இதனால் நிர்வாகப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் விதமாக ஆசிரியர்கள் கோரிக்கைகளை இணையவழியில் பெற்று அவற்றை நிறைவேற்ற பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள், பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை இனி இணையவழியில் பதிவு செய்யலாம். அதற்கு சார்ந்த அலுவலர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிலளிப்பார். முதல்கட்ட நிலையில் உள்ள அலுவலரால் தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டால், அடுத்தநிலையில் உள்ள அலுவலர்களுக்கு அந்த மனு அனுப்பப்படும். இதையடுத்து குறிப்பிட்ட அலுவலர்கள் அதன்மீது நடவடிக்கை மேற்கொள்வர்.


மேலும், கோரிக்கை ஏற்கப்படுகிறதா, நிராகரிக்கப்படுகிறதா என்பதை உடனுக்குடன் மனுதாரர்களுக்கு இணையவழியிலேயே தெரியப்படுத்தப்படும். இந்த புதிய நடைமுறை மூலம் ஆசிரியர்கள், பணியாளர்களின் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு காணப்படும்.


மேலும், கோரிக்கைகள் சார்ந்த போராட்டங்களும் கணிசமாக குறையும். இத்திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இது அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்தனர்.



Post Top Ad