போராடும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச முன்வர வேண்டும் - Asiriyar.Net

Tuesday, October 3, 2023

போராடும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேச முன்வர வேண்டும்

 



''ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்,'' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது:


சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் செப்., 27 முதல், 30 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதில், '12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும். ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என்பதே முக்கிய கோரிக்கை.


மன உளைச்சல்

மாணவர்களை திறன் மிக்கவராக மாற்றும் ஆசிரியர்களுக்கு, எந்த பிரச்னையும் இல்லாத வாழ்க்கை சூழல் இருந்தால் தான் சிறப்பாக கற்பிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.


அவர்களை மாநில அரசு கண்டுகொள்வதே இல்லை. பலர் திருமணம் செய்யக்கூட முடியாமல் வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்.


ஒரே பணியை செய்யும், சம அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவில் ஊதிய முரண்பாடுகள் இருப்பதும் அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.


வருத்தம்

ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சந்தித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.


அரசிடம் கோரிக்கை வைத்து போராடும் எவரையும், அரசுக்கு எதிரானவர்களாக பார்க்கக் கூடாது. ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை முதல்வர் நேரில் அழைத்து பேசி நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.


அரசு பள்ளி ஆசிரியர்கள் போராடுவது சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். அரசு விரைந்து செயல்பட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad