2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு படித்து பட்டம் பெற்றிருந்தாலும் அரசுப்பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படியே தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பணி கிடைப்பது அரிதாகவே இருக்கிறது.
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பணிக்கான ஒரு மறுநியமனத் தேர்வை ரத்து செய்யவும், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 என்பதை நீக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு, 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியின்றி தவிக்கும் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment