NMMS - தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் தொடர்ந்து சாதிக்கும் மாணவியர் - Asiriyar.Net

Wednesday, April 19, 2023

NMMS - தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் தொடர்ந்து சாதிக்கும் மாணவியர்

 

தேசிய வருவாய் வழி திறன் தேர்வில், ஜலகண்டாபுரம் அரசு மகளிர் பள்ளி தொடர்ந்து சாதித்து வருகிறது. நடப்பாண்டில், இப்பள்ளியின், 31 மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.


தமிழக அரசு, உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை தேர்வை பிப்., 25ல் நடத்தியது.


சேலம் மாவட்டத்தில், 705 பள்ளிகளில், 11 ஆயிரத்து, 407 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு, 15ம் தேதி வெளியானது.


சேலம் மாவட்டத்தில், 495 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மட்டும், 31 மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.


இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை பெற்றது.


மேலும், ஆறு ஆண்டுகளாக, இத்தேர்வில் இப்பள்ளி மாணவியர் சாதித்து வருகின்றனர். அதன்படி, 95 பேர் இதுவரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.


நடப்பாண்டு தேர்ச்சி பெற்ற, 31 மாணவியரும், அடுத்த, நான்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை பெற உள்ளனர்.


சாதனை படைத்த ஜலகண்டாபுரம் மாணவியரை, தேர்வுக்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியரான, உதவி தலைமை ஆசிரியர் அருண்கார்த்திகேயன், பொறுப்பு தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


No comments:

Post a Comment

Post Top Ad