400-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அனுமதி - Asiriyar.Net

Wednesday, January 4, 2023

400-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அனுமதி

 இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாகத் தற்காலிக பயிற்றுநர்களை 4 மாதங்களுக்கு நியமித்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் (பொறுப்பு) க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட, வட்டார அளவில் ஓர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையே மாவட்ட, வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காதவாறு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக தற்காலிக ஆசிரியர் தேவையுள்ள பள்ளிகளின் விவரம் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்பட வேண்டும். அந்த ஆசிரியர்களின் பணிக் காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையாகும்.


சம்பந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.


அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி தற்காலிக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை ஜனவரி 9-ம் தேதிக்குள் முடிக்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதன்மூலம் 400-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.


Post Top Ad