தகுதியின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 4, 2023

தகுதியின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி உறுதி

 அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு தகுதி அடிப்படையிலேயே நியமனம் நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 1,895 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்கு மாநிலம்முழுவதும் 9,915 பேர் விண்ணப்பித்தனர்.


இவர்களில் தகுதியானவர்கள் மட்டும் பணிநியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.


முதல்நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 318 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் தகுதியான 76 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கலந்தாய்வில் பங்கேற்ற 56 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.


இந்நிலையில், கலந்தாய்வுப் பணிகளை ஆய்வு செய்த உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, தேர்வான மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.


இன்று முதல் பொது கலந்தாய்வு


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. இடஒதுக்கீடும் சரியாகபின்பற்றப்படவில்லை. ஆனால்,திமுக ஆட்சியில் யுஜிசி தகுதியின்படி கவுரவ விரிவுரையாளர்கள் வெளிப்படையாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஜன.4 (இன்று) முதல் நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்படும்.


தமிழகத்தில் நிதி நிலைமை சீரான பின்னர் கவுரவ விரிவுரையாளர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட 4,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.


தேசிய கல்வி கொள்கை இல்லை: தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இதுதொடர்பாக யுஜிசி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்வதில் எந்தபயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயர்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைக்கழகங்கள் பின்பற்றும். நமது பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


செய்தியாளர் சந்திப்பின்போது, உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


சீரமைக்கப்பட்ட பாதை: சைதாப்பேட்டை அண்ணா சாலையில் இருந்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் செல்ல மண்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் குண்டும், குழியுமாக இருந்ததால் கலந்தாய்வுக்கு வந்த மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் சிரமம் அடைந்தனர்.


இதற்கிடையே கலந்தாய்வை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி, இயக்குநரகம் வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவசர, அவசரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் மண், செங்கற்களால் குழிகள் சமப்படுத்தப்பட்டு, பாதை சீரமைக்கப்பட்டது.


Post Top Ad