ஆசிரியர் மண்டையை உடைத்த பிளஸ் 2 மாணவர்
மானாமதுரை:மானாமதுரையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மண்டையை உடைத்த பிளஸ்2 மாணவர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 33க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை தூண்டிவிட்டு வேறு ஆசிரியர்களை கேலி செய்வதும், தாக்குவதும், இதுபோன்று மாணவர்கள் குழுவாக பிரிந்து பள்ளி வளாகத்திற்குள்ளும், வெளியிலும் அடிக்கடி மோதிக் கொள்வதும் தொடர்கிறது. மண்டை உடைப்பு இங்கு பணிபுரியும் ஆசிரியர் கலையரசு 45, என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கேலி செய்துள்ளார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசினர். இந்நிலையில் நேற்று அந்த மாணவர், ஆசிரியர் கலையரசுவை பள்ளி வளாக கேட்டிற்கு முன் கட்டையால் தலையில் தாக்கியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
பெற்றோர்கள் சிலர் கூறுகையில், 'இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, ''இச்சம்பவம் குறித்து இதுவரை எனக்கு தகவல் வரவில்லை. அப்பள்ளி தலைமையாசிரியரும் இதுகுறித்து கூறவில்லை. இச்சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment