ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு: அஞ்சல் துறை அறிமுகம் - Asiriyar.Net

Saturday, January 21, 2023

ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு: அஞ்சல் துறை அறிமுகம்

 



அஞ்சல் துறையின் கீழ்  செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB), டாடா ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்  ஆகியவற்றுடன் இணைந்து ரூ.399 மற்றும் ரூ.396 பிரீமியங்களில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை, பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி பாக்கியலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: 


சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றுசேரும் வகையில் அனைத்து அஞ்சலகங்களில் பணியாற்றும் தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிகக்குறைந்த பிரீமிய தொகையுடன் கூடிய விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை பொது அஞ்சலகத்தில் இதற்கான சிறப்பு முகாம் இந்த மாதம் முழுவதும் நடக்க  இருக்கிறது.


இந்த காப்பீட்டுத்  திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றுகளின் நகல்கள் போன்ற எந்தவித சான்றுகளும் இல்லாமல், தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன், விரல் ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களிடல் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும். 


இதன் பிறகு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம்), விபத்தால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் (உள்நோயாளியாக இருப்போருக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புற நோயாளிகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வரையும்), விபத்தால் மரணம் அல்லது ஊனம், அல்லது பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளுக்கு (அதிகபட்சம் 2 குழந்தைகளுக்கு) கல்வி செலவுக்காக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.


விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு  நாள் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 10 நாட்களுக்கு, பயணச் செலவுக்காக ரூ.25 ஆயிரம் வரை, விபத்தால் உயிரிழக்க நேரிட்டால் இறுதிச் சடங்கு செய்ய ரூ.5000 வரை வழங்கப்படும். 


ஆண்டுக்கு ரூ.399 மற்றும் ரூ.396ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுபதன் மூலம், எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். அதனால் பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தை இணைய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Post Top Ad