சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் வருமான வரி அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா.? - Asiriyar.Net

Sunday, January 29, 2023

சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களும் வருமான வரி அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா.?

 




Income Tax Return | வருமான வரிச் சட்டத்தின்படி 60 வயதுக்கு உட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ஆண்டு சம்பளம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருந்தால் கட்டாயமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.


கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31, 2022 அன்றுடன் முடிவடைந்தது. உங்கள் கணக்கு வழக்கு மற்றும் வருமானம் தணிக்கை செய்யப்பட வேண்டியதில்லை என்ற பட்சத்தில், ஜுலை 31 ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையை பதிவு செய்திருக்க வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் நபர்களுக்கு அக்டோபர் அல்லது டிசம்பர் வரை அதற்கான கால அளவு வழங்கப்படும். வருமானம் ஈட்டும் அனைவருமே வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் சம்பளம் வாங்குபவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா? சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்கனவே TDS பிடிக்கப்பட்டது, எனவே அவர்கள் எதற்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்? சம்பளம் வாங்குபவர்களுக்கு TDS பிடித்தம் இல்லையே, ஏன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று பலவித கேள்விகள் இருக்கின்றன. அதை பற்றிய விளக்கங்களை இங்கே பார்க்கலாம்.


வருமான வரிச் சட்டத்தின்படி 60 வயதுக்கு உட்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ஆண்டு சம்பளம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருந்தால் கட்டாயமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வருமானம் என்பது சம்பளம், சேமிப்பு கணக்கில் இருந்து கிடைக்கும் வட்டி, பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி, வீட்டு வாடகை மூலமாக கிடைக்கும் வருமானம் என்று அனைத்தையும் உள்ளடக்கும். வருமான வரி சட்டத்தில் ஐந்து விதமான வருமானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:


சம்பளம்

வீட்டு வாடகை / சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம்

வணிகம் / வியாபார வருமானம்

பங்குச் சந்தை பரிவர்த்தனைகள், பங்கு வாங்குதல், விற்றல் சார்ந்த வருமானம்

இதர வருமானங்கள் – வங்கி வட்டி, சேமிப்புகள் முதிர்வு உள்ளிட்டவை


நீங்கள் வாங்கும் சம்பளம் ஆண்டுக்கு ₹2,50,000 க்கு குறைவாக இருந்தாலும் உங்களுக்கு இதர வருமானங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கட்டாயமாக வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


சம்பளம் மட்டும் வருமானமாகக் கொண்டவர்களுக்கு பல விதமான செலவுகளை மொத்த வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ளலாம். உதாரணமாக, உங்கள் ஆண்டு வருமானம் மூன்று லட்சமாக இருந்தால், அதில் இருந்து PF பங்களிப்பு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், இன்ஷூரன்ஸ் காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கழித்துக் கொள்ளலாம். உங்கள் சம்பள வருமானத்தில் TDS பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கு வருமான வரி ரீஃபண்டு கிடைக்கும் பட்சத்தில், நீங்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


உங்கள் வருமானம், ஆண்டுக்கு ₹2,50,000 க்கு குறைவாக இருந்தால், உங்கள் நிறுவனம் TDS பிடித்தம் செய்யாது. ஆனால், உங்களுக்கு வேறு ஆதாரங்களில் இருந்து வருமானம் இருந்தால், அது உங்கள் நிறுவனத்துக்கு தெரியாது. எனவே மொத்த வருமானத்தின் அடிப்படையில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் வருமானத்தைக் கணக்கிட்டு, ITR தாக்கல் செய்வது உங்களுடைய பொறுப்பு.





No comments:

Post a Comment

Post Top Ad