அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் - Asiriyar.Net

Tuesday, January 24, 2023

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 




அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் சம்பளத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தப் பள்ளிகள், தங்கள் பகுதியைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, இலவசமாக கல்வி சேவை வழங்குகின்றன.


சமீப காலமாக நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்து விட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதனால், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின்படி, பல அரசு உதவி பெறும் பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்ற, பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்துள்ளது.


அதேநேரம், சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை. இதை சமப்படுத்தும் வகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் அடிப்படையில், கட்டாய இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதே குழுமத்தைச் சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். இந்த கவுன்சிலிங்கை மாவட்ட அளவில் நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கு, இன்று முதல், 25ம் தேதி வரை, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டாய இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தனித்தனி நாட்களில் இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இந்த கட்டாய இடமாறுதலுக்கு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad