பிளஸ் 2 மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு தயாராக இன்று முதல் வழிகாட்டுதல் வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல் - Asiriyar.Net

Wednesday, January 4, 2023

பிளஸ் 2 மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு தயாராக இன்று முதல் வழிகாட்டுதல் வகுப்பு: பள்ளிக்கல்வித்துறை தகவல்

 



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாட்டில் பிளஸ்2 மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் வகையில் இன்று முதல் வழிகாட்டுதல்களை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ்2 பயிலும் மாணவர்கள், விருப்பத்தின் அடிப்படையில் நுழைவு தேர்வுகள் எழுதி உயர்கல்விகளை தொடர வேண்டும் என்பது அரசின் திட்டமாகும். 


இதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கும் நாள், முடிவடையும் நாள், கட்டண விபரங்கள் உள்ளிட்ட தேர்வு சார்ந்த விபரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாவட்டத்திலும் என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர்கள் வாயிலாக பயிற்சி பெற்ற என்எஸ்எஸ் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். 


வரும் 4ம் தேதிக்குள் இப்பணிகள் நிறைவுறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்எஸ்எஸ் மாணவர்கள் இதற்கான முன் தயாரிப்புகளை இன்று மாலைக்குள் பெற்று கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொள்வர். வரும் 4ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதிக்குள் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை மாணவர்களுடன் சேர்ந்து என்எஸ்எஸ் மாணவர்கள் பூர்த்தி செய்வர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.


பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ள நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த வீடியோக்களை ஒவ்வொரு பள்ளியிலும் ஹைடெக் லேப் மூலம் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜேஇஇ உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப விண்ணப்பிக்க உதவிட வேண்டும். 


முதன்மை கருத்தாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தகவல்களை பெற்று வரும் 15ம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad