மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டுமா?- தமிழக அரசு தகவல் - Asiriyar.Net

Friday, September 3, 2021

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டுமா?- தமிழக அரசு தகவல்

 





நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


நாளை (1-ந் தேதி) முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறக்கவும் தமிழக அரசு முடிவு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


2 தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய அதிக வாய்ப்புள்ளது.


ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வழியாக பயில்வதற்கும், பயிற்றுவிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றாக பழகி விட்ட சூழலில் 9-ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளை திறக்கவும் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு ஏற்கத்தக்கதல்ல.


ஆகவே கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை நெருங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேரடியாக அல்லாமல், ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசுத்தரப்பில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். உயர்கல்வித்துறை சார்பில், சமூக இடைவெளியை பின்பற்றுவது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட வழிகாட்டல்கள் முறையாக பின்பற்றப்படும்.


50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் அழைக்கப்படுவர். அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள். அனைத்து நிபுணர்களுடன் ஆலோசித்தே இத்தகைய முடிவை அரசு எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் தரப்பில், ''நேரடியாக வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே இந்த வழக்கின் நோக்கம்'' என தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து அரசுத்தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.








Post Top Ad