அகவிலைப்படி உயர்வு, சத்துணவு ஊழியர் ஓய்வு வயது அதிகரிப்பு - முதல்வரின் முக்கிய அறிவிப்புகள் - Asiriyar.Net

Wednesday, September 8, 2021

அகவிலைப்படி உயர்வு, சத்துணவு ஊழியர் ஓய்வு வயது அதிகரிப்பு - முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்

 




தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நாளுக்கு, மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக பேரவையில் நேற்று, அரசு பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை படித்தார்.


அதில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கு, உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கும் உற்ற தோழனாக என்றைக்கும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அரசுகள் அறிவித்து செயல்படுத்திய, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்கள் எண்ணற்றவை, இந்த நாட்டிற்கே வழிகாட்டுபவை. அந்த வகையில், அண்மையில் பல்வேறு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை சார்ந்த சங்க பிரதிநிதிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளையெல்லாம் பரிசீலித்து, பின்வரும் முக்கிய  அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.


1. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து, நிதிநிலை அறிக்கையில் 1-4-2022 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வரப்பெற்ற அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கையினை பரிசீலித்து, அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே, அதாவது 1-1-2022 முதல், அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.  


இதன்மூலம், 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.  இவ்வாறு அறிவிக்கப்பட்ட காலத்திற்கு முன்னரே, அகவிலைப்படி உயர்வினை அமல்படுத்துவதால், மூன்று மாத காலத்திற்கு கூடுதலாக ரூ.1,620 கோடி செலவினம் ஏற்படும். ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.6,480 கோடி செலவாகும்.


2. சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 60ஆக உயர்த்தப்படும்.


3. அரசு பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வி தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இனி, அவர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வி தகுதியின்மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர் கல்வி தகுதிகளுக்கான ஊக்கத்தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.


4. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்.


5. ஓய்வுபெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.


6. 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில், முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்த போராட்டங்கள் தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தினை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்த காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் ஆகியவை பணிக் காலமாக முறைப்படுத்தப்படும்.


7. வேலைநிறுத்த போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டகாலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும்  சரிசெய்யப்படும்.


8. பணியில் இருக்கும்போது காலமான அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் எளிதில் அரசு பணி பெறும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.  


9. அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயது வரம்பினை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக, அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும்.


10. கொரோனா சிகிச்சைகளை பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 லட்சம் ரூபாயைவிடவும் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவு தொகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும்.


11. கணக்கு மற்றும் கரூவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும்பொருட்டு, அவற்றை துரிதமாகவும், எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய வகையில், மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.


12. புதியதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு, பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.  


13. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப, ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும். மக்களாட்சி தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறினார்.


* மூன்று மாத காலத்திற்கு முன்னதாக அமல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து, நிதிநிலை அறிக்கையில் 1-4-2022 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுக்கு கடும் நெருக்கடியான நிதி சூழல் இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட நாளுக்கு மூன்று மாத காலத்திற்கு முன்னதாகவே, 1-1-2022 முதல் அகவிலைப்படி உயர்வு  அமல்படுத்தப்படும். இதன் மூலம், 16 லட்சம்  அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி  உயர்வு அமல்படுத்துவதால், மூன்று மாத காலத்திற்கு கூடுதலாக ரூ.1,620 கோடி  செலவினம் ஏற்படும். ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.6,480 கோடி செலவாகும்.





No comments:

Post a Comment

Post Top Ad