இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் 85% பேர் 5-6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு மட்டுமே தற்போது ரெட் அலெர்ட் ஆகும் அளவுக்கு அதிக கேஸ்கள் பதிவாகிக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார்.
மீண்டும் தலைதூக்குகிறது கொரோனா.
இந்திய நகரங்கள் சில இப்போது லாக்டௌன் அறிவித்திருக்கின்றன. கடந்த திங்களன்று ஒரே நாளில் இந்திய அளவில் சுமார் 27,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் அச்சம்மூட்டும் அளவிற்கு இருக்கிறது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் புதிதாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 100% வரை அதிகரித்திருக்கிறது. ஒரு அபார்ட்மென்ட்டில் 10 பேர், ஒரே பள்ளியில் 56 குழந்தைகள் என மீண்டும் கொரோனா நிறைய பேரை பாதித்திருக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கொரோனா விஷயத்தில் முக்கியமான விஷயமாகக் கருதப்படும் 'ஆக்டிவ் கேஸ்' எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது, கொரோனா வந்து குணமாகுபவர்களின் எண்ணிகையவிட, நோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் தமிழகத்தில் லாக்டௌன் என்ற வதந்தியும் பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்திய அளவில் கொரோனா பாதிக்கப்பட்டதில் 85% பேர் 5-6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு மட்டுமே இப்போது ரெட் அலெர்ட் ஆகும் அளவுக்கு அதிக கேஸ்கள் பதிவாகிக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியிருக்கிறார். மக்கள் சமூக இடைவெளி, மாஸ்க், சானிட்டைஸர் உட்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காததுதான் இதற்குக் காரணமென அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் நேரம் என்பதால் தமிழகத்தில் கொரோனாவை ஆட்சியாளர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் இணையத்தில் அதிகமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை பற்றி கலந்தாலோசிக்கும் நிபுணர் குழுவும் சமீபமாக கூடவில்லை. கடைசியாக கூடியபோதும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது பற்றி நிபுணர் குழுவைச் சேர்ந்த திரு. ராமசுப்ரமணியம் அவர்களிடம் பேசினோம். "தமிழக நிலவரம் இப்போது லாக்டௌன் தேவை என்ற அளவுக்கு வந்துவிட்டது. ஆனால், தேர்தல் காரணமாக நிபுணர் குழு சமீபத்தில் கூடவில்லை. லாக்டௌன் பற்றி முதல்வர் எடப்பாடிதான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இருப்பதால் அவர்களும் இது பற்றி பேசவில்லை. கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு கிராஃபைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. மற்ற அனைத்து விஷயங்களையும் ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் கொரோனா பற்றி மட்டுமே அனைவரும் பேசும் காலம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் காணொளியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியான நிலையில் இந்த அவசர ஆலோசனை நடத்தப்படுகிறது.
தனிப்பட்ட அளவிலாது கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் புரிந்து மக்கள் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment