கற்போம் எழுதுவோம் திட்டத்தில் பயின்றவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 47 மையங்களில் கற்போம் எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி கிராமப் பகுதிகளில் எழுத்தறிவில்லாத 20 பேரை இணைத்து, இந்த மையங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த வகுப்புக்கு தினமும் சராசரியாக 3 முதல் 5 பேர் மட்டுமே வந்தனர். தொடர்ந்து வகுப்புக்கு வர தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த போதும் வரஇயலாத நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் இந்த மையங்களில் பயின்றவருக்கு வரும் 27ம் தேதி தேர்வு நடைபெறும். 26ம் தேதிவரை திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுப் பணியை முறையாக முடிக்காத தலைமை ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு வர இயலாது என கூறியவர்களை தேர்வுக்கு மட்டும் எப்படி வரவழைக்க முடியும்.
மேலும் கொரோனா பேரிடர் பரவல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 1 முதல் 11ம் வகுப்புவரை முறையான கல்வி திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்தவேளையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிலும் கற்போம் எழுதுவோம் திட்டத்தில் உள்ள கற்போருக்கான தேர்வினை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.