தொலைதூர மற்றும் இணையவழி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஏப்.30-ம் தேதி வரை நடத்திக்கொள்ள யுஜிசி அவகாசம் அளித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பு ஆண்டு கரோனா பரவலால் தொலைதூர, திறந்தவெளி மற்றும் இணையவழி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் மாதத்துக்குள் நடத்திமுடிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டிருந்தது.
தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் நடைபெற்ற யுஜிசி 550-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாணவர் சேர்க்கைக்கான காலஅவகாசம் ஏப்.30-ம் தேதி நீட்டிக்கப்படுகிறது. மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை மே 15-ம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் உரிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு மட்டுமே சேர்க்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.