அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன் ?... சங்கங்கள் சாதி, மதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன - உயர்நீதிமன்ற சரமாரி கேள்வி - Asiriyar.Net

Tuesday, December 1, 2020

அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன் ?... சங்கங்கள் சாதி, மதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன - உயர்நீதிமன்ற சரமாரி கேள்வி

 





அரசு ஊழியர்களுக்கு சங்கங்கள் ஏன்? அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, முறைகேட்டில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் பல்லூரில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா இடத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி என வழக்கு தொடர்ந்த நபர், அரசுப் பள்ளி ஆசிரியர் என்றும், அதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளதாகவும் அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச பட்டா பெற்றவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர்.



இது போன்ற அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கையில் அதற்கான சங்கங்கள் போராடுகின்றன எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? என வினவினர். பெரும்பாலான சங்கங்கள் சாதி, மதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்றும், அந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினர்.


முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட வேண்டும்,  புகார் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் சொத்துக்களையும் சேர்த்து மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும், அப்போது தான் இது போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.



இதுதொடர்பான வழக்கு விசாரணையில், அரசு ஊழியர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad