TNPSC - தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண் கட்டாயம்! - Asiriyar.Net

Wednesday, December 23, 2020

TNPSC - தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண் கட்டாயம்!

 


டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய, ஆதார் எண் கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 






தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும், அவர்களின் ஒரு முறைப்பதிவு மற்றும் நிரந்தர பதிவில், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதுவரை, ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள், விரைவில் பதிவு செய்ய வேண்டும். 




தேர்வர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட, ஒரு முறைப்பதிவு வைத்திருக்க அனுமதியில்லை. ஆனால், பலர் தவறுதலாக, ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளதாக, தேர்வாணையத்திற்கு தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு முறை மட்டும், தங்களின் ஆதார் பதிவை ரத்து செய்து, தங்கள் விருப்பப்படி, நிரந்தர பதிவில் ஆதார் எண்ணை இணைக்க, https://www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 





தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். வரும் காலங்களில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் முன், தங்களின் ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. ஜன., 3ல் நடக்க உள்ள, 'குரூப் -1' முதல் நிலை தேர்வு; ஜன., 9, 10ல் நடக்க உள்ள தொழில், வணிக துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்த பின், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.




இதுகுறித்து, விளக்கம் தேவைப்பட்டால், 1800 425 1002 என்ற எண்ணுக்கு, வரும், 8ம் தேதி வரையிலான வேலை நாட்களில், காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும், contacttnpsc@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


விடைத்தாளில் மாற்றம்





டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:


டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், விடை களை தேர்வு செய்யும் வகையிலான, கொள்குறி வகை வினாத்தாள், பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விடைத்தாளின் மாதிரி படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்க வீடியோவும், தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை கவனமாக பார்த்து, விளக்கங்களை கவனமாக ஆய்வு செய்து, சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள தேர்வர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad