அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் கடந்த 2018-2019ம் ஆண்டில் ஏற்பட்ட வேதியியல் பாடத்துக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு தற்போது அதற்கான தெரிவுப் பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்க ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நாளை தொடங்க உள்ளது. இதையடுத்து, இறத்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
* மேற்கண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் அசல் சான்றுகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். தகுதியற்றவர்களின் பட்டியல்கள் தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்.
* கவுன்சலிங் மூலம் பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் ஜனவரி 4ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பணியில் சேர வேண்டும்.
* தமிழ் வழி இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி இடஒதுக்கீடு, இன சுழற்சி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, ஆகியவற்றை கவுன்சலிங்கின்போது சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.