தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கான தேர்வு:
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள நீதிபதிகள் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. கொரோனா காரணமாக தேர்வு முடிவுகளில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதி மன்றமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் இணைந்து நடத்திய தேர்வில் சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என மொத்தம் 2500 பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வு எழுத குறைந்தது 7 ஆண்டுகள் நீதிபதிகளாக பணிபுரிந்தவர்களே தகுதியுடையவர்கள். இதில் முதல்நிலைத் தேர்வில் அரசியல் அமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் குறித்தான கேள்விகள் கேட்கப்படும்.
இந்நிலையில் முதல்நிலை தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 2500 பேரில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், ‘எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு விடைத்தாள் கடினமாக இருந்தது. மேலும் தவறான கேள்விகளுக்கு மைனஸ் மதிப்பெண்களும் வழங்கப்பட்டதே காரணம் என கூறப்பட்டு உள்ளது’. கடந்த ஆண்டு நடந்த முதல்நிலை தேர்வுகளில் இதே காரணங்களால் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.