கொரோனா வைரஸ் உள்பட எந்த ஒரு வைரசும் உருமாறும் என்பது இயற்கையான ஒன்றாகும்.2019 டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா இதுவரையில் பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கிறது.
இப்போது இங்கிலாந்தில் காணப்படும் வைரசின் வடிவம் வி.யு.ஐ. 202012/01 மற்றும் பி 1.1.7 என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. புதிய வடிவம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என்பதுதான் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உருமாற்றம் பெற்ற வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே உள்ள
காய்ச்சல்,
ஜலதோஷம்,
தொண்டை வலி,
நாவில் சுவையின்மை
உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன்,
சேர்ந்து சோர்வு,
பசியின்மை,
தலை வலி,
வயிற்றுப்போக்கு,
மன குழப்பம்,
தசை வலி,
தோல் அரிப்பு
ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்பை விட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் தான் புதிய பரிணாமம் என்று அழைக்கின்றனர். இத்தகைய புதிய வைரஸ் ஏற்கனவே பரவி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகத்தில் பரவுகிறது. ஏற்கனவே உள்ள வைரஸை விட நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக தாக்கக் கூடியது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளே புதிய வைரஸின் பாதிப்பைத் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
உயிர்பலி வாங்குமா புதிய வைரஸ்?
இருப்பினும் பலகட்டப் பரிசோதனைகளின் அடிப்படையில் தான், இதனை உறுதி செய்ய முடியும் என்கின்றனர். இவ்வாறு வைரஸ்கள் உருமாற்றம் அடைவது இயல்பு தான். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் புதிய வகை வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் கட்டுப்பாடுகள்
புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதாவது பயணிகள் தங்கள் பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்று வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கே வந்தவுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேரும், கோவையைச் சேர்ந்த 3 பேரும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
கொண்டாட்டத்திற்கு தடை
இதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்கிடையில் வரும் 2021ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி டிசம்பர் 31ஆம் தேதி இரவு, ஜனவரி ஒன்றாம் தேதி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடற்கரை, சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை இரண்டு இலக்கங்களில் காணப்படுகிறது. எனவே நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருவது தெரிகிறது. இந்த சூழலில் புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகம் பாதிப்பைச் சந்தித்திடக் கூடாது. எனவே அரசும், பொதுமக்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருந்தால் நிச்சயம் புதிய கொரோனா வைரஸ் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment