தமிழகத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு அட்டவணையை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் மினி கிளினிக் தொடங்க உத்தரவிட்டு, அதன்படி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறுவார்கள். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழகத்தின் பணியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகம் தான் கொராேனா வைரசை தடுக்கும் பணியில் முன்னோடியாக திகழ்கிறது. இதுதவிர எல்லா துறையிலும் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் பள்ளி திறந்தவுடன் வழங்கப்படும். பள்ளிக்கு மாணவர்கள் வராவிட்டாலும் அவர்களுக்கான சைக்கிள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவுகளை அறிவிப்பார். நடப்பு கல்வி ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பே இல்லை. மேலும், 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, அதற்கு பிறகு தான் முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதை பொறுத்தவரையில் நிதி பற்றாக்குறை இருப்பதால் அதுகுறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.
* வேலூரில் திருவள்ளுவர் படம் வெளியானது
‘கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் வேலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார பாடப் பகுதியில் திருவள்ளுவரின் படத்தை போட்டு அவரின் குறளையும் போட்டுள்ளனர். கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் எந்த பாடப்பகுதியையும் ஆன்லைனில் வெளியிடக்கூடாது என்று கூறியும், தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.