இணையவழியில் கற்பிப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு, தொடக்கப்பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை விரிவுப் படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், போதுமான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் கொண்டிருப்பதால், அரையாண்டு தேர்வு நடத்த ஆயத்தமாகி விட்டன. அரசுப்பள்ளிகளில் ஹைடெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருந்தும், இணையவழியில் கற்பிப்பதில், தன்னிறைவு ஏற்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.பொதுத்தேர்வு அல்லாத பிற வகுப்புகளுக்கு, முதல்பருவ பாடத்திட்டம் கூட முழுமையாக கையாள முடியாத நிலை நீடிக்கிறது.
மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்ற ஒற்றை வரியை காரணமாக்கி கொண்டு, சில ஆசிரியர்கள் 'டிமிக்கி' கொடுப்பது தெரியவந்துள்ளது.இதனால், தொடக்க, நடுநிலை வகுப்பு மாண வர்களை, மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதோடு, பாடத்திட்டங்களை புரிய வைப்பதில் பெரும் சவால் காத்திருக்கிறது.இத்தேக்க நிலையை மாற்ற, தொடக்க வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, இயக்குனர், இணை இயக்குனர், சி.இ,ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், மாவட்ட வாரியாக தொடக்க வகுப்புகளில் உள்ள, தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பள்ளிகள் திறந்ததும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாவட்டத்தில், வட்டார வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்து, தகவல் திரட்டும் பணிகள் நடக்கின்றன.