பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர மற்ற மாணவா்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இணையவழியாக மட்டுமே வகுப்புகள் நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி பொது முடக்கம் அமலானது. இதைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால், மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்படாத வகையில் இணையவழியில் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிக்கும் மாணவா்களின் நலனை முன்னிட்டு இணைய வழி வகுப்புகள் பற்றி புதிய அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொறியியல் பயிலும் இறுதி ஆண்டு மாணவா்கள் தவிா்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும். நாள்தோறும் 5 வகுப்புகளை மட்டுமே இணையவழியில் நடத்த வேண்டும். இதர மூன்று பாடவேளைகளை புற மதிப்பீட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இறுதிப் பருவத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு மட்டும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.