கொரோனாவுக்கு பின் மாரடைப்பு அதிகரிப்பு? மாநிலம் முழுதும் ஆய்வு நடத்த திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, April 9, 2023

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு அதிகரிப்பு? மாநிலம் முழுதும் ஆய்வு நடத்த திட்டம்

 




தமிழகத்தில் கொரோனாவுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு குறித்து, தமிழக மாரடைப்பு கட்டுப்பாட்டு திட்ட அமைப்பு டாக்டர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.


பிறக்கும்போது உடலில் 60 மி.கி., அளவு கெட்ட கொழுப்பு இருந்தாலும், நாளடைவில் மனிதர்களின் வாழ்வியல், உணவு பழக்கம், மன அழுத்தம் என பல காரணிகளின் விளைவுகளால் கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது.


காரணிகள்

இப்படி அதிகரிக்கும் கெட்ட கொழுப்பு, மனிதர்களின் ரத்த குழாயில் சென்று படிகிறது. இந்த ரத்த கட்டிகள், ரத்த ஓட்டத்தை பாதித்து, மாரடைப்பு ஏற்பட காரணமாக உள்ளது. இவற்றுடன் மரபணு வாயிலாகவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.


இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு பின், இளம் வயது மாரடைப்பு ஏற்படுவோர் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.


கொரோனாவுக்கு பின், உடல் செயல்பாடு குறைவு, மன அழுத்தம், போதை பொருட்கள் பயன்படுத்துதல், உணவுமுறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயது மாரடைப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.


தற்போது மாரடைப்பால் பாதிக்கப்படும் 10 பேரில், எட்டு பேர் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.


எனவே, இளம் வயது மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகள் மற்றும் சதவீதம் குறித்து ஆய்வு நடத்த, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை இதயவியல் பேராசிரியரும், தமிழக மாரடைப்பு கட்டுப்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜஸ்டின் பால் கூறியதாவது:


தமிழகத்தில் 2018 - 19ல், மாரடைப்பு குறித்த ஆய்வை நடத்தினோம். 2,500 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், 2,379 பேருக்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.


இவர்களில், 25 சதவீதம் பேருக்கு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தநோய், புகையிலை பழக்கம் போன்றவை இல்லாமலேயே மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.


இதைதொடர்ந்து, மாரடைப்பு ஏற்படுவதற்கு மேலும் சில காரணிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


மன அழுத்தம்

குறிப்பாக, துாக்கமின்மை, மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது, வெறுப்பு, கோபம், உணவுமுறை மாற்றம் போன்றவை, முக்கிய காரணியாக இருக்கக்கூடும்.


தற்போதைய சூழலில், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.


எனவே, கொரோனாவுக்கு பிந்தைய அளவில், மாரடைப்பு அதிகரித்து வருகிறதா என்பது குறித்து, ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.



Post Top Ad