தொடக்கக்கல்வித்துறையில் வேண்டும் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் மற்றும் பதவியுயர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, September 20, 2021

தொடக்கக்கல்வித்துறையில் வேண்டும் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் மற்றும் பதவியுயர்வு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்!

 


தொடக்கக் கல்வித்துறையில் ஒவ்வொரு ஒன்றியமும் தனித்தனி அலகாக இயங்குகிறது. இது ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இருந்த காலக்கட்டத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறை.ஏனெனில் அக்காலகட்டத்தில் ஆசிரியர் நியமனம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்ளேயே நடைபெற்றது.இதனால் பிற ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து ஓர் ஆசிரியர் மாறுதலில் வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்தால் அவர் அவ்வொன்றியத்தில் இளையோராக கருதப்பட்டார்‌. இந்த நடைமுறை அக்காலகட்டத்தில் நியாயமான நடைமுறையே.ஆனால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்  அரசின் கட்டுப்பாட்டில் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன.மேலும் ஆசிரியர் நியமனம் என்பது ஊராட்சி ஒன்றியத்திற்குள்ளாகவே நடைபெறுவதும் இல்லை. மாநில அளவிலான முன்னுரிமை அடிப்படையிலும், அதன்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு வாயிலாகவும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் யாருக்கும் சொந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணிநியமனம் கிடைப்பதும் இல்லை.


இந்தநிலையில் இன்றும் ஒவ்வொரு ஒன்றியமும் தனித்தனி அலகாக இயங்குகிறது. இவ்வாறு இயங்குவதால் பிற மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் பணிநியமனம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியர் பணிநியமனம் செய்யப்பட்ட ஒன்றியத்தில் இருந்து வேறு ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றால், அவர் பல ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருந்தாலும் புதிதாக மாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் இளையோராகவே கருதப்படுகிறார். இதனால் அவரின் பதவி உயர்வு பெருமளவில் பாதிப்படைகிறது. ஒரு சில ஒன்றியங்களில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வேகமாகவும், பெரும்பாலான ஒன்றியங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குக்கூட பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது.


தொடக்கக் கல்வித்துறையில் பதிவு உயர்வு என்பதே அரிதான ஒன்றாக மாறிப்போன சூழலில் இந்த நடைமுறையால் பதவி உயர்வு என்பதே கனவாகிவிடுகிறது. 


#பதவியுயர்வில் சென்றாலும்


மேலும் ஓர் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக மேலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றால் ஓய்வு பெறும் வரை அவர் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல முடியாது. அவ்வாறு பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல வேண்டுமென்றால் அவர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இடைநிலை ஆசிரியராக பணியில் அமர்ந்து தான் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.


இந்த பாதிப்புகளுக்கெல்லாம் மூல காரணம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதே. தற்போதைய நிலையில் தொடக்கக் கல்வித்துறையும் பள்ளிக்கல்வி துறையோடு சேர்ந்து தான் இயங்குகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் மாறுதல் போன்றவை நடைபெறுவது போன்று தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் போன்றவை நடைபெற வேண்டும். இவ்வாறு மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்தால் ஓர் ஆசிரியர் எந்த ஒன்றியத்தில் பணியாற்றினாலும், மாறுதலில் சென்றாலும் பணியேற்பு நாளே தகுதியாக கருதப்படும். இதுவே ஆசிரியர்களுக்கான சமநீதி மற்றும் சமவாய்ப்பினை வழங்கும் நடைமுறை ஆகும். அரசு இதனை செயல்படுத்துவதும் எளிது. #செயல்படுத்துவதும் நிர்வகிப்பதும் அரசுக்கு எளிது


EMIS இணையதளம் மூலம் அனைத்து பள்ளி மற்றும் ஆசிரியர்களின் தகவல்கள் என அனைத்தும் விரல் நுனியில் உள்ளது. அதனால் எந்தவிதமான வேலைப்பளுவும் மற்றும் செலவும் அரசுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.


பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை ஆணையர் அவர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதால் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் போக்க மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் நடைமுறை ஏற்படுத்திட வேண்டும் என பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். கனிவுடன் கோரிக்கையினை ஆராய்ந்து மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Post Top Ad