தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் தடை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 27, 2021

தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: ஐகோர்ட் தடை

 







அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.




ராமநாதபுரம் மாவட்டம் கிடாதிருக்கை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:தலைமையாசிரியர்களுக்கு முதலில் பொது இடமாறுதல் கலந்தாய்வு, பின் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது வழக்கம். 2020 ல் கொரோனா ஊரடங்கால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. 2021ல் பொது இடமாறுதல் கலந்தாய்வு மூலம் சொந்த மாவட்டத்திற்கு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்தேன். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பொது பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.





பணியில் மூத்த தலைமையாசிரியர்கள் நடப்பு கல்வியாண்டில் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளது. இதில் விதிமீறல் உள்ளது. உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது பதவி உயர்வு கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்திய பின், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜேக்கப் குறிப்பிட்டார்.





இதுபோல் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் மனு செய்திருந்தனர்.தனி நீதிபதி உத்தரவு: துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு அதைத் தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வை ஏப்.,30 க்குள் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.




இதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பு, 'சட்டசபை தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளன. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் தனி நீதிபதியின் உத்தரவுப்படி கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை. தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்,' என மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.






Post Top Ad