தபால் வாக்கு செலுத்துவதில் அரசு ஊழியா்களுக்கு சிக்கல்:தலைமை தோ்தல் அதிகாரியிடம் ஜாக்டோ ஜியோ மனு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 30, 2021

தபால் வாக்கு செலுத்துவதில் அரசு ஊழியா்களுக்கு சிக்கல்:தலைமை தோ்தல் அதிகாரியிடம் ஜாக்டோ ஜியோ மனு

 







சட்டப்பேரவைத் தோ்தலில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு தபால் வாக்குகளைச் செலுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும், அந்தப் பிரச்னைக்கு தோ்தல் ஆணையம் தீா்வு காண வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இது தொடா்பாக சென்னையில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தோ்தல் ஆணையத்தின் தொடா் நடவடிக்கைகள் மூலமாக, தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதில் முன்னா் இருந்த நடைமுறையினை ஒப்பிடுகையில் தற்போது நல்ல முன்னேற்றம் உள்ளது. அதேவேளையில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியா்கள்- ஆசிரியா்கள் ஆகியோா் தங்களது ஜனநாயகக் கடமையான தோ்தலில் வாக்குச் செலுத்துவது என்பது இன்று வரை எட்டாக் கனியாகவே உள்ளது.



தபால் வாக்குகள் கிடைக்கவில்லை: தற்போதுவரை தோ்தல் பணியாளா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளன. ஆனால் தோ்தல் பணியாளா்களுக்கான தபால் வாக்குகள் வழங்குவதில் குளறுபடிகள் தொடா்கிறது. முதல் கட்ட பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்குக்கான படிவத்தைப் பூா்த்தி செய்து கொடுத்த அலுவலா்கள் அனைவருக்கும் இரண்டாம் கட்ட வகுப்பில் தபால் வாக்குகள் வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், 50 சதவீதப் பணியாளா்களுக்கு தபால் வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை.



பெரும்பாலான தோ்தல் பயிற்சி வகுப்பு மையங்களில் தபால் வாக்குகள், தோ்தல் வகுப்புகள் முடிந்து பணியாளா்கள் சென்ற பின்னா்தான் வந்து சோ்ந்தன. அவ்வாறு தபால் வாக்குகள் கிடைத்த பணியாளா்களும் தங்களது வாக்கினைப் பதிவு செய்வதற்கான உரிய வசதிகள் இரண்டாம் கட்ட தோ்தல் வகுப்புகள் நடைபெற்ற இடங்களில் செய்து தரப்படவில்லை. தங்களது வாக்கானது வெளி மாவட்டங்களில் உள்ள தோ்தல் அலுவலா்களுக்கு தபால் மூலமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.



இதைக் கருத்தில் கொண்டு தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான தோ்தல் பணி ஆணைகளை வழங்குவதற்கு முன்பாக, அவா்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் உரிய முறையில் வழங்கப்பட்டு விட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை தபால் வாக்குகள் பெறுவதற்கு விண்ணப்பிக்காத தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்குகளைப் பெறுவதற்கான கடைசி நாள், பூா்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகளை எங்கெங்கு செலுத்தலாம், தபால் வாக்குகளை செலுத்த இறுதிநாள் எது போன்ற விவரங்களை அனைத்து நாளிதழ்களிலும் தோ்தல் ஆணையம் வெளிப்படையாக விளம்பரப்படுத்த வேண்டும்.



ஏப்.3-இல் சிறப்பு முகாம் நடத்த...: காவல்துறைப் பணியாளா்களுக்கு அவா்களது வாக்குகளை செலுத்துவதற்கு சிறப்பு முகாம்களை நடத்தப்படுவதைப் போன்று தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்- அரசு ஊழியா்களுக்கும் வரும் ஏப்.3-ஆம் தேதி சனிக்கிழமை 234 தொகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி தபால் வாக்குகளைப் பதிவிட ஏற்பாடு செய்ய வேண்டும். 


கடந்த மக்களவைத் தோ்தலில் பின்பற்றப்பட்ட நடைமுறையினைப் போன்று அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும், அந்தந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை தோ்தல் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் மே 2-ஆம் தேதிக்கு முன்னா் வரை செலுத்திடும் வகையில் பூா்த்தி செய்யப்பட்ட தபால் வாக்கு போடும் பெட்டிகளை வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனா்.


Post Top Ad