மாணவர்களுக்குக் குறைந்த எடையில் புத்தகப் பை: பள்ளிகளில் அமல்படுத்த அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, January 6, 2021

மாணவர்களுக்குக் குறைந்த எடையில் புத்தகப் பை: பள்ளிகளில் அமல்படுத்த அரசு உத்தரவு

 


மாணவர்களுக்குக் குறைந்த எடையில் பள்ளிப் புத்தகப் பைகள் இருப்பதை உறுதி செய்ய டெல்லி பள்ளிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, பள்ளிப் புத்தகப் பை 2020 (School Bag Policy 2020) என்ற பெயரில் அண்மையில் அனைத்து மாநிலக் கல்வித் துறைச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை அனுப்பியது. அதில், ஆண்டுதோறும் 6 - 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தகப் பை இல்லாத தினங்களைப் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல புத்தகப் பையின் எடையைத் தொடர்ந்து, சீராகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிட வேண்டும்.மழலையர் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை கூடாது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் முன் வைக்கப்பட்டிருந்தன. புதிய கல்விக் கொள்கையின்படி புத்தகப் பை தொடர்பான வல்லுநர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
இந்நிலையில், மாணவர்களுக்குக் குறைந்த எடையில் பள்ளிப் புத்தகப் பைகள் இருப்பதை உறுதி செய்ய டெல்லி பள்ளிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அம்மாநிலப் பள்ளி இயக்குநரகம் அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''அதிக எடை கொண்ட புத்தகப் பைகள், பள்ளிக் குழந்தைகளின் நலனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். வளரும் குழந்தைகளின் முதுகெலும்பு மற்றும் முழங்கால்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் இரண்டு அல்லது அடுக்குமாடிக் கட்டிடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில், மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தகக் பைகளைத் தூக்கிக்கொண்டு படிகளில் ஏற வேண்டும். இது பிரச்சினைகளின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கும். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள புத்தகங்களின் அளவு அதிகரிக்கப்படக் கூடாது. மாணவர்கள் தினந்தோறும் அதிக அளவிலான புத்தகங்களைக் கொண்டு வர அவசியமில்லாத வகையில் பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் கால பாட அட்டவணையைத் திட்டமிட்டு, நிர்ணயிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommend For You

Post Top Ad