தமிழகம் முழுவதும் 13ஆயிரம் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 60 சதவீதம் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்தனர், 40 சதவீதம் பேர் வரவில்லை. மாணவர்களின் வருகையையொட்டி சானிடைசர் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு 9 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்படி அரசு பள்ளிகள் 6,193, அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகள் 2 ஆயிரம், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 4 ஆயிரம், சிபிஎஸ்இ பள்ளிகள் 1000 என தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு நேற்று வந்தனர். அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து, பெற்றோரின் அனுமதிக் கடிதம் பெற்று வந்திருந்தனர். அந்த கடிதங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிகளின் நுழைவுவாயில்களில் சோப்பு தண்ணீர் வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் கைகளை கழுவிய பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மாத்திரை, ஜிங்க் மாத்திரை தலா 10 வழங்கப்பட்டது. அத்துடன் கையை தூய்மை செய்வதற்கான கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து அனைத்து மாணவர்களும் வந்தனர். முகக் கவசம் இல்லாத மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே உணவு மற்றும் குடிநீர் கொண்டு வந்திருந்தனர். காலை 9 மணிக்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.
பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கின. ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட்டனர். அந்தந்த பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கு முன்னதாக, கொரோனா பற்றியும், தேர்வு பற்றியும் விளக்கம் அளித்தனர். குறிப்பாக மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் வகையில், தைரியப்படுத்தும் வகையில் கொரோனா தொற்றின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் அளித்தனர். பின்னர், தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள பாடப் பகுதிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இருக்கின்ற குறுகிய காலத்தில் தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் விளக்கினர்.
இந்நிலையில், மேற்கண்ட பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் 32 கல்வி மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பத்தாம் வகுப்புகளில் படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு சமைத்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழக்கம் போல மதியம் அவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் இடையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் குழுவாக சேர்வது, பள்ளி வளாகங்களில் உலாவக் கூடாது, குழுக்களாக சேரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாலை 4.30 மணிக்குள் வகுப்புகள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால், நெரிசலை தவிர்க்க ஒவ்வொரு வகுப்புக்கும் தனித் தனியாக நேரம் ஒதுக்கி, வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பள்ளிகள் தொடங்கிய நேற்றைய முதல் நாளில் சுமார் 60 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்ததால், மீதம் உள்ள 40 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது குறித்து செல்போன்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது தவிர முதல் நாளில் மாணவ, மாணவியருக்கு வழிகாட்டு நெறிமுறைகள், தேர்வு பற்றிய விவரங்கள், பாடத்திட்டம் குறித்து மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு இது நீடிக்கும். அதற்கு பிறகு தான் வகுப்புகளில் பாடம் நடத்தத் தொடங்குவார்கள்.
'காய்ச்சல் உள்ளவர்களை திருப்பி அனுப்பினர்'
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,13,687 மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதில் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் அவரவர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீட்டுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். பல மாதங்களுக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.