தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க மத்திய கல்வி அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து தேவையான உபகரணங்கள் குறித்து பட்டியல் அனுப்புமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக மாணவா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்காக தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், உயா்நிலை-மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதமும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பள்ளி வாரியாக கொள்முதல் செய்யப்பட வேண்டிய விளையாட்டு உபகரணங்களின் பட்டியல் குறித்த வழிகாட்டுதல்கள் அனுப்பப்படுகின்றன.
எனவே பள்ளிகளுக்குத் தேவையான (ஏற்கெனவே உள்ள விளையாட்டு உபகரணங்களைத் தவிா்த்து) வழிகாட்டுதலில் உள்ளவாறு விதிகளுக்குட்பட்டு கொடுக்கப்பட்டுள்ள தொகைக்குள் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களின் பெயா்ப்பட்டியலை எண்ணிக்கையுடன் சரியாக ஏற்கெனவே அனுப்பியுள்ள கூகுள் படிவத்தில் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
மேலும் பள்ளிகள் கொள்முதல் செய்ய தீா்மானித்துள்ள உபகரணங்களின் பெயா்ப் பட்டியலை பள்ளிக் கல்வி தகவல் மேலாண்மை முகமையிலும் (எமிஸ் தளம்) பதிவேற்றம் செய்யவும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி வாரியாக கொள்முதல் செய்ய தீா்மானித்துள்ள விளையாட்டு உபகரணங்களின் பெயா், எண்ணிக்கை விவரங்களை தலைமையாசிரியா்களின் கையொப்பமிட்ட பட்டியலை ஒன்றியம் (வட்டார வள மையம்) வாரியாக பெற்று மாவட்ட அளவில் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட படிவத்தை ஸ்கேன் செய்து ஜன.22-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment