புதுச்சேரியை சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த மாணவி சுப்புலட்சுமியின் தாயார் மகாலட்சுமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான புதுச்சேரி அரசு முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. ஒரே நாடு, ஒரே மெரிட் என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்த கடந்த 2016ல் நாடு முழுவதும் நீட்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில், அரசு பள்ளியில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் அது கல்வி தரத்தை பாதிக்கும். தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்த வாய்ப்பு குறைவு. இந்த வழக்கில் விரிவான பதில் மனு செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்போது, மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மத்திய அரசு காலம் கடத்தி வருவது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும்.
இடஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. 2016ல் இருந்து தற்போது வரை புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு கூட அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment