"தேர்வுக்காகப் படிக்காதீர்கள்" - மாணவர்களுக்கு கல்வித்துறை இணை இயக்குநர் அறிவுரை - Asiriyar.Net

Thursday, January 21, 2021

"தேர்வுக்காகப் படிக்காதீர்கள்" - மாணவர்களுக்கு கல்வித்துறை இணை இயக்குநர் அறிவுரை

 





மாணவர்கள் தேர்வுக்கு மட்டும் படிக்காமல் அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் இணை இயக்குநர் ராஜேந்திரன்.


கரோனா நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நலனுக்காக செவ்வாய்க்கிழமை முதல் திறக்கப்பட்டன. பல்வேறு வழி காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைச் செயல்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இதற்கான ஆய்வு அலுவலர்களையும் கல்வித்துறை நியமித்திருந்தது.



இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் கடையநல்லூர், இடைகால், புளியங்குடி, வாசுதேவநல்லூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.


பள்ளிகளில் போதுமான தெர்மல் ஸ்கேனர், சானிடைசர் வசதிகள்  உள்ளனவா? என ஆய்வு செய்த அவர் வகுப்பறைதோறும் சென்று பார்வையிட்டு மாணவர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். மாணவர்களிடம் அரசின் நெறிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், மாணவர்கள் தேர்வுக்காக மட்டும் படிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். 



அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காகப் படிக்க வேண்டும். தற்பொழுது போட்டித் தேர்வுகளுக்கும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள நிறையப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பாடப் புத்தகங்களில் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மாணவர்கள் பயன்படுத்தி ஏராளமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் .ஆசிரியர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.


பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது;



கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளும் ,தென்காசி மாவட்டத்தில் 239 பள்ளிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 313 பள்ளிகளும் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் வருகை தந்துள்ளனர். தினமும் 20 முதல் 25 பள்ளிகள் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதன்கிழமை தென்காசி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் உள்ள 25 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அரசின் வழிகாட்டு நெறிமுறை படி மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என்றார்.


முதன்மைக் கல்வி அலுவலர் கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிதம்பரநாதன், ஜெயபிரகாஷ் ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad