தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகள் இன்று பள்ளிகள் திறப்பு - வாரத்துக்கு 6 நாட்கள் செயல்படும் - Asiriyar.Net

Tuesday, January 19, 2021

தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகள் இன்று பள்ளிகள் திறப்பு - வாரத்துக்கு 6 நாட்கள் செயல்படும்

 






தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. 


தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து 13 ஆயிரம் பள்ளிகள் தூய்மை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தி அரசு பஸ்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 


தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு 9 மாதங்கள் கடந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் இயங்க உள்ளன. பள்ளிகள் திறப்பு தொடர்பான பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், கல்வி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 




இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளிகள் 6,193,  அரசு நிதியுதவி பெறுகின்ற பள்ளிகள் 2 ஆயிரம், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 4 ஆயிரம், சிபிஎஸ்இ பள்ளிகள் 1000 என தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்காக இன்று முதல் இயங்க உள்ளன.


முன்னதாக, அந்தந்த பள்ளி வளாகங்களில் ஜேசிபி இயந்திரம் கொண்டு செடிகள் மற்றும் புதர்கள் அற்றும் பணியும், வகுப்பறைகளை தண்ணீர் மூலம் தூய்மை செய்வதும், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதையடுத்து 18ம் தேதியே அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதால் நேற்று காலை 9 மணிக்கே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். 




அத்துடன் மின்துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளும் கடந்த இரண்டு நாட்களாக அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட பாடப்பகுதிகளை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அந்தந்த பாட ஆசிரியர்களுக்கு நேற்று வழங்கினர். அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் வகுப்பு ஒன்றுக்கு தலா 25 பேர் மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், மேற்கண்ட பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் 32 கல்வி மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் ஆய்வுப் பணிகளை தொடங்கினர். இதன்படி, வகுப்பறைகளை  இரண்டு நாட்களுக்கு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, மாணவர்கள் உட்காரும் இருக்கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்கள் பள்ளி முடிந்து சென்ற பிறகும் வகுப்பறைகளை தினமும் தூய்மை செய்ய அரசுப் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் வாரத்துக்கு 6 நாட்கள் செயல்படும்.






பள்ளிக்கு வரும் மாணவர்கள் நுழைவு வாயிலிலேயே தெர்மல் கருவியால் சோதிக்கப்படுவார்கள். அத்துடன் கைகளுக்கு கிருமி நாசினியும், கைகளை தூய்மை செய்யவும் அறிவுறுத்தப்படுவார்கள். அத்துடன் இரண்டு வகுப்பறைகளுக்கு இடையில் கைகளை தூய்மை செய்யும் கிருமி நாசினி வைக்கப்படும். மாணவர்களுக்கு தலா 10 ஜிங்க் மாத்திரையும், மல்டி விட்டமின் மாத்திரைகளும் இன்றே வழங்கப்படும். அதேபோல மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும், வகுப்பில் தலா 25 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது கண்டிப்பாக இடைவெளி விட்டு அமர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குழுவாக சேர்வது, பள்ளி வளாகங்களில் நடப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.


30 நிமிடம் இடைவெளி: மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது ஏற்படும், கூட்ட நெரிசலை தவிர்க்க 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்குவது அரை மணி நேரம் இடைவெளிவிட்டு தொடங்கப்படும். அதேபோல பள்ளி முடிந்த பிறகு ஒவ்வொரு வகுப்புக்கும் தனித் தனி நேரம் ஒதுக்கி மாணவர்களை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடு, பள்ளி சாப்பாடு: பள்ளிக்கு வரும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே குடிநீர், உணவு ஆகியவற்றை எடுத்த வர வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புகளில் படிக்கும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்துணவு சமைத்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




* தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு 9 மாதங்கள் கடந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

* தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு 9 மாதங்கள் கடந்த நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

* அரசு பள்ளிகளில் தினமும் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பாடம் நடத்தப்பட வேண்டும்.

* ஒரு வகுப்புக்கு தலா 25 மாணவர்கள் மட்டுமே உட்கார வைக்கப்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

* பள்ளிகள் அனைத்தும் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்.


தனியார் பள்ளிகள் எப்படி?

தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் சில பள்ளிகளில் வகுப்புக்கு தலா 13 அல்லது 14 பேர் வரையும், காலை 9 மணி  முதல் மதியம் 12 வரையும் பாடம் நடத்தவும், வாரத்துக்கு இரண்டு வகுப்புகள் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad