பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன? - Asiriyar.Net

Friday, January 22, 2021

பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன?

 






கொரோனா ஊரடங்கிற்கு பின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 70 சதவீத மாணவர்கள் மட்டுமே, பள்ளிக்கு வரத் துவங்கி உள்ளனர்.



இதனால், படிப்பை தொடர முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனரா என, கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பள்ளிகள், 19ம் தேதி முதல் மீண்டும் செயல்பட துவங்கி உள்ளன. இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




சென்னை மாநகராட்சி பள்ளிகளை பொருத்தவரையில், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன. இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், 70 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். பள்ளிக்கு வராத மற்ற மாணவர்களின் நிலை குறித்து, கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி துவங்க உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:




சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். சராசரியாக ஓராண்டு, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில மாணவர்கள், குடும்ப பொருளாதாரம் காரணமாக, வேலைக்கு சென்றிருக்கலாம். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.சொந்த ஊர், உறவினர்களின் ஊர்களுக்கு சென்றவர்கள், திரும்பி வர சில நாட்கள் தேவைப்படும். 




அவர்கள், மீண்டும் பள்ளியில் சேர்ந்து விடுவர். ஆனால், வேலைக்கு சென்ற மாணவர்கள், பள்ளிப்படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவர். அவர்களை கணக்கெடுத்து, தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், மீண்டும் பள்ளி படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், மாணவர்களின் குடும்ப பின்னணிக்கு ஏற்ப, கல்வி உதவி தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post Top Ad