சிவகங்கையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். தமிழகத்தில்தான் கல்வி முறை சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர். 742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்க மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும். காலத்திற்கு ஏற்ப ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்கி விட்டோம். ஏற்கனவே 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.
மேலும் சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் ஆசிரியர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் பிப்.13-ம் தேதிக்குள் பட்டியல் வெளியிட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்தெரிவித்தார்.