10, 12 வகுப்புக்கு 'ஆன்லைன்' தேர்வு - Asiriyar.Net

Friday, January 22, 2021

10, 12 வகுப்புக்கு 'ஆன்லைன்' தேர்வு

 






கல்வி தொலைக்காட்சியில் படித்த மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று முதல், 'ஆன்லைன்' வழி தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கொரோனா தொற்று பரவல் காரணமாக, 10 மாதங்களாக, பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும், பாடங்கள் நடத்தப்பட்டன.



இந்நிலையில், 10 மற்றும்பிளஸ் 2 மாணவர்களுக்கு, 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன; நேற்று முதல் பாடங்கள் நடத்தப்படும் நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை அறிய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 'ஆன்லைன்' தேர்வை, இன்று முதல் நடத்த உத்தரவிட்டு உள்ளது.


இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசு பள்ளிகளில் உள்ள, 'ஹைடெக் லேப்' வழியாக, இந்த தேர்வை நடத்த வேண்டும். 'இந்த மதிப்பீட்டின்படி, மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து, வரும் நாட்களில் பாடங்கள் நடத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.




பொது தேர்வு


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 15ம் தேதிக்கு பின், பொதுத்தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.புதிய கல்வி ஆண்டு பிறந்து, ஏழு மாதங்களுக்கு பின், தற்போது தான் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, பாடங்களை முழுமையாக முடிக்காத நிலையில், மார்ச்சில் பொதுத்தேர்வை நடத்தினால், மாணவர்களால் சரியாக எழுத முடியாது.


எனவே, இரண்டு மாதங்களுக்கு பின், தேர்வு நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில், வாரம், ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மே, 15க்கு பின் அல்லது ஜூனில், பொது தேர்வு நடத்தலாம் என, முடிவு செய்துள்ளனர்.

Post Top Ad