இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, March 11, 2021

இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை





தமிழக அரசு உத்தரவு
* பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: பத்திர பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது.
அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுகினால் கூட உடனடியாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள், சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி அலைக்கழிக்கின்றனர்.

குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்யலாம். அதே நேரத்தில் ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால் உட்பிரிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்தில் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இத்திட்டத்தில் புதிய மாறுதலை கொண்டு வந்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடுகிறது. இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. இதற்கு நாங்கள் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும். இதன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் சார்பதிவாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும், இதனால், பொதுமக்கள் பயனடைவார்கள்' என்றார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மக்களின் அலைச்சல் குறையும்' என்றனர்.

Post Top Ad