தலைமை ஆசிரியர் பணி மாறுதல் - ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் - Asiriyar.Net

Wednesday, July 2, 2025

தலைமை ஆசிரியர் பணி மாறுதல் - ரத்து செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம்

 




தலைமை ஆசிரியரின் பணி மாறுதலை ரத்து செய்யக் கோரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 3,300 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியராக மகேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலராக பணியிடம் மாற்றம் பெற்றுள்ளார்.


இதனிடையே, தலைமை ஆசிரியர் பணியிடம் மாறிச் செல்லும் தகவல் அறிந்த மாணவிகள் நேற்று பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ‘தலைமை ஆசிரியரின் பணியிடம் மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அவரை தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும்’ என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த நகரப் போலீஸார், மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் மாணவிகளிடம் பேசும்போது, “போராட்டம் நடத்துவது தவறான செயல். அனைவரும் அமைதியாக அவரவர் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும். நான் இங்குதான் இருப்பேன்” என்றார். இதையேற்று மாணவிகள் அனைவரும் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad