படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி - ஆசிரியைக்கு குவியும் பாராட்டு - Asiriyar.Net

Friday, July 18, 2025

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி - ஆசிரியைக்கு குவியும் பாராட்டு

 



கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின மாணவி, தலைமையாசிரியையாக பதவியில் அமர்ந்ததற்கு ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்கு உட்பட்ட பேணு அருகே உள்ள பழங்குடி கிராமத்தில் வசிப்பவர்கள் கோவிந்தன் - பாறுக்குட்டி தம்பதி. கோவிந்தன் அரசு ரப்பர் கழகத்தில் பால் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஷீலா, பத்துகாணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், விடுதியில் தங்கி தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


தொடர்ந்து, ஆசிரியர் பணி செய்ய விருப்பப்பட்ட ஷீலா திண்டுக்கல், ஒட்டிநச்சத்திரம் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இதன் பின்னர், பேச்சுப்பாறை பழங்குடியினர் பட்டியலில் மாறுதல் கிடைத்தது. தொடர்ந்து, வட்டப்பாறை பள்ளிக்கு மாறிய அவருக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்து.


இந்த நிலையில், பத்துகாணி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். தலைமை ஆசிரியர் ஷீலாவுக்கு திருமணமாகி சபரீஷ் , சக்திவேல் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் மது, விவசாயம் செய்து வருகிறார்.


படித்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பெறுப்பேற்ற ஷீலா கூறுகையில், “ மாணவியாக பத்துகாணி பள்ளிக்கு வரும்போது இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும், மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நான் தலைமை ஆசிரியராக வரவேண்டும் என இறைவன் விரும்பியுள்ளார்.


இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்வேன்; தற்போது எங்கள் பள்ளியில் அதிகமான வசதிகள் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து பணி செய்வேன்” என்றார்.


அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக, பள்ளியில் பயின்ற பழங்குடியின பெண் ஒருவர் வந்துள்ளது, பழங்குடி இன இளைஞர் மற்றும் பெண்களிடம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஷீலாவுக்கு, அவரது நண்பர்கள், ஊர்மக்கள், மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், உடன் வேலை செய்யும் மற்ற ஆசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad