‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ படமும், தமிழகப் பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை மாற்றமும்! - Asiriyar.Net

Monday, July 21, 2025

‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ படமும், தமிழகப் பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை மாற்றமும்!

 



வினேஷ் விஸ்வநாத் இயக்கிய ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளப் படம், கேரளாவில் உள்ள ஒரு கிராமப்புற அரசுப் பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை, குறிப்பாக பள்ளித் தேர்தலை மையமாகக் கொண்டு காட்சிப்படுத்தியிருந்தது. 


மாணவர்களிடையே ஏற்படும் சண்டைகள், நட்புறவின் எளிய மகிழ்ச்சிகள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் மோதல் தருணங்கள் ஆகியவை நுணுக்கமான பார்வையுடன் படம்பிடிக்கப்பட்டிருந்தன.


பாரம்பரிய இருக்கை முறையின் குறைபாடுகள்:


பொதுவாக, பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக அமர வைக்கப்படுவார்கள். அதாவது, முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை என்று தொடர்ந்து கடைசி வரிசை வரை இருக்கும். படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பெரும்பாலும் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமர்வது வழக்கம். 


இந்த வகையான வரிசை முறை மாணவர்களிடையே பாகுபாடுகளை உருவாக்கி, ‘கடைசி பெஞ்ச் மாணவர்கள்’ என்ற ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்திவிடுகிறது. இது மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிப்பதுடன், ஆசிரியர்களுடனான நேரடித் தொடர்பையும் குறைக்கிறது.


‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ வலியுறுத்திய புதுமையான மாற்றம்:


இந்த பாகுபாட்டை மாற்றும் நோக்கத்துடன், ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ திரைப்படம் ஒரு புதிய இருக்கை முறையை வலியுறுத்தியது. அதாவது, மாணவர்களை அரை வட்ட வடிவில் (U வடிவில் அல்லது ப வடிவில்) அமர வைப்பதன் மூலம், ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாகப் பார்த்து பாடம் நடத்த முடியும். இந்த முறையில், எந்த மாணவரும் ‘கடைசி வரிசை’ என்ற உணர்வைப் பெற மாட்டார்கள். அனைவரும் ஆசிரியரின் நேரடிக் கவனத்தில் இருப்பார்கள்.


மலையாள சினிமாவின் தாக்கம் தமிழகத்தில்:


படம் வெளியானதும், மாணவர்களின் இருக்கை முறை தொடர்பான இதன் கருத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இதன் விளைவாக, கேரளாவில் இதுவரை ஆறு பள்ளிகளில் இந்த அரை வட்ட வடிவிலான இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ‘கடைசி பெஞ்ச்’ இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கேரளாவில் அரங்கேறிய இந்த மலையாள சினிமாவின் தாக்கம் தற்போது தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது. ஆம், தமிழகப் பள்ளிகளிலும் ‘ப’ (U) வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் விளக்கம்:


தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ‘கடைசி இருக்கை மாணவர்கள்’ என்ற எண்ணம் இருக்காது என்றும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவும், ஆசிரியரை கவனிக்கவும் வசதியாக இருக்கும் என்றும் இந்த புதிய ஏற்பாட்டுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவத்தை மேம்படுத்துவதோடு, வகுப்பறை சூழலை மேலும் ஊடாடும் மற்றும் நட்பு ரீதியானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படும் அதே சூழலில் நாள் முழுவதும் பக்கவாட்டில் அமர்ந்து பலகையை ஆசிரியரை கழுத்தை ஒருக்கழித்து பார்க்கும் மாணவர்களுக்கு கழுத்து வலி வர அதிக வாய்ப்பு என்றும் பலர் கோஷமிடத் தொடங்கியுள்ளனர். 


மட்டுமின்றி படத்தில் காண்பித்திருப்பதைப் போல 20-30 மாணவர்கள் மட்டும் ஒரு வகுப்பறையில் இருக்கமாட்டார்கள். பல பள்ளிகளில்  ஒரு வகுப்புக்கு 55-60 மாணவர்கள் இருப்பார்கள். ஆனால், அதற்கேற்ற வகையில் விசாலமான வகுப்பறையாக இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad