குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் வரிசையில் 8ஆவது மாவட்டமாகத் திருவாரூரில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. 3 கல்வி வட்டாரங்களிலிருந்து 370 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது, SLAS2025 (மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு )அறிக்கையின் மூலம் தலைமையாசிரியர்கள் உணர்ந்து கொண்டது என்ன? பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் என்ன ? என்று தலைமை ஆசிரியர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்குத் தலைமை ஆசிரியர்கள், அனைவரும் “2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை நிச்சயமாக வழங்குவோம்” எனும் நம்பிக்கையை அளித்ததாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “ முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.
மேலும் அவர், “ இன்று குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களிடம், அடுத்த முறை சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment