பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலைமறைவான ஓய்வுபெற்ற தாசில்தாரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சர்ச் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். தஞ்சையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் திருமுருகன் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு திருமுருகனிடம் தொடர்ந்து பாலகிருஷ்ணன் வலியுறுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து 11 லட்சம் ரூபாய் பணத்தை புரட்டி கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமுருகன் திருப்பிக் கொடுத்துள்ளார். இதில், மீதம் உள்ள 4 லட்ச ரூபாயை அவரால் சொன்ன தேதிக்குள் கொடுக்க முடியாமல் போய் உள்ளது.
எனவே மீதம் உள்ள 4 லட்ச ரூபாயை உடனே தர வேண்டும் என்று பாலகிருஷ்ணன் திருமுருகனிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனாலும் திருமுருகன் பணம் கொடுக்க தாமதித்து வந்துள்ளார். இதனால் பொறுத்து பார்த்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தையான ஓய்வுபெற்ற தாசில்தார் ஜம்புநாதன், அவரது மகள் ரோகினி மற்றும் நெடுவாக்கட்டையைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய 4 நபர்களும் சேர்ந்து திருமுருகனை அழைத்து, பணத்தை கொடுக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான திருமுருகன், தனது இறப்புக்கான காரணத்தை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து மன்னார்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமுருகனின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன், அவரது மகள் ரோகினி மற்றும் நொடுவாகோட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமுறைவாக உள்ள பாலகிருஷ்ணனின் தந்தை ஓய்வுபெற்ற தாசில்தார் ஜம்புநாதனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா?
தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. ஒருவேளை யாருக்காவது தற்கொலை எண்ணம் தோன்றினாலோ அல்லது அது குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டாலோ வாரத்தின் 7 நாட்களும் அதாவது 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படும் சினேகா அறக்கட்டளையின் 044- 24640050 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், டாடா நிறுவனத்தின் 9152987821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம்.
No comments:
Post a Comment