மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த பின்பு புதிதாக வெளியிட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் உயர்தர பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட நோட்டுகளாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியது. ஆனால் தற்போது உண்மையான 500 ரூபாய் நோட்டு போலவே அச்சு அசலாக 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மக்களுக்கு மிகவும் அவசர எச்சரிக்கையாக விடுத்துள்ளது என்று நியூஸ் 18 தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அவசர எச்சரிக்கையை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), நிதி புலனாய்வுப் பிரிவு (FIU), மத்திய புலனாய்வுப் அமைப்பு (CBI), தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) போன்ற முக்கியமான நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த போலி நோட்டுகள் மேம்பட்ட தரத்தில் தயாரிக்கப்பட்டும், அச்சிடப்பட்டும் இருக்கும் காரணத்தால், உண்மையான 500 ரூபாய் நோட்டுகளுக்கும், இந்த போலி 500 ரூபாய் நோட்டுகளுக்கு வித்தியாசம் தெரியாத அளவுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் 500 ரூபாயைப் பெறும் போது ஒரு முறைக்கு இரு முறை செக் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நேரில் ஆய்வு செய்துள்ளதாகக் கூறும் நியூஸ்18 செய்தியில் சந்தேகத்திற்கிடமான 500 ரூபாய் நோட்டுகளை யார் எங்கிருந்து பெற்றாலும் அதை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது மக்கள் மத்தியில் புழக்கத்தில் வந்துள்ள போலி 500 ரூபாய் நோட்டுகள் உயர் தரத்திலான பேப்பரில் அச்சிடப்பட்டு இருந்தாலும் மிகச்சிறிய, ஆனால் முக்கியமான ஒரு எழுத்துப் பிழை கொண்டுள்ளது. இதை வைத்துத் தான் தற்போது போலி ரூபாய் நோட்டுகள் என கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த போலி 500 ரூபாய் நோட்டில் RESERVE BANK OF INDIA என்ற முக்கிய வாசகத்தில், RESERVE என்ற வார்த்தையில் உள்ள E என்ற எழுத்துக்குப் பதிலாக A என்ற எழுத்து தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அது RASERVE BANK OF INDIA என்று அச்சிடப்பட்டுள்ளது. இதை வைத்துத் தான் இது போலி 500 ரூபாய் எனக் கண்டறியப்பட்டு உள்ளது.
இது மிகவும் சிறிய எழுத்துப்பிழை என்பதால் எளிதில் மக்கள் கண்களில் சிக்காது, எனவே 500 ரூபாய் நோட்டை எப்போது எங்கு வாங்கினாலும் கவனமாகப் பார்க்க வேண்டும். போலி ரூபாய் நோட்டுகள் நம் நாட்டிற்கு மட்டும் அல்லாமல் எந்தொரு நாடாக இருந்தாலும், அதன் நிதி அமைப்பிற்கு ஆபத்தானவை.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியச் சந்தையில் பேடிஎம், ஜிபே , பீம் யுபிஐ ஆகியவை ஆதிக்கம் செலுத்த தொடங்கின, ஆனாலும் இன்றும் ரொக்க பணத்தின் புழக்கம் தான் அதிகம். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பணப்புழக்கம் 13.35 லட்சம் கோடி ரூபாய், அதுவே 2025 ஜனவரியில் இந்தியாவில் பணப்புழக்கம் 35.99 லட்சம் கோடி ரூபாய் என ரவிசுடான்ஜானி என்ற பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர் தனது பதிவில் கூறியிருந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
No comments:
Post a Comment