சிவகங்கை மாவட்டத்தில், வீட்டு பாடம் எழுதாமல் வந்த மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
சிவகங்கை மாவட்டத்தை சேர்த்த பாண்டிச்செல்வி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், "எஸ்.எஸ் கோட்டையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் எனது மகள் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழ் வீட்டு பாடத்தை செய்யவில்லை என்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு அக்.24ஆம் தேதி 200 தோப்புக்கரணமும், அக் 25ஆம் தேதி 400 தோப்புக்கரணமும் போட வேண்டும் என தமிழாசிரியர் சித்ரா கட்டாயப்படுத்தியுள்ளார்.
பருவமடைந்து 10 நாட்கள் முடிந்த நிலையில், ஆசிரியரின் இந்த தண்டனையால் தனது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், நண்பர்களின் உதவியுடன் வீட்டிற்கு வந்தார். தோப்புக்கரணம் போட்டதால் அதீத ரத்தப்போக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 2 நாட்கள் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகளை பரிசோதித்த மருத்துவர்கள், பருவமடைந்து 40 நாட்கள் கூட முடிவடையாத நிலையில் தோப்புக்கரணம் போட்டதால் சில உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். அதனால், தனது மகளின் நிலைக்கு காரணமான ஆசிரியர் சித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என பாண்டிச்செல்வி தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக 1 மாதத்தில் வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை ஆசிரியர் சித்ராவிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மேலும், ஆசிரியர் சித்ரா மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
7-ம் வகுப்பு மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஆசிரியைக்கு அபாரதம் விதிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment