பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட முயன்றனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்திய சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறப்பாசிரியர்களின் போராட்டம் காரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு பணிக்கு வந்த அனைவரையும், சோதனை செய்த பின்னரே காவல் துறையினர் உள்ளே அனுமதித்தனர்.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டான் போஸ்கோ கூறும் போது, "ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் 1800 சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் திமுக ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என காத்திருக்கிறோம். ஒருங்கிணைந்த சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் சிறப்பாசிரியர்கள் இந்திய மறுவாழ்வு குழுமத்தில் பதிவு செய்வது இருப்பதுடன், அவர்கள் அளிக்கும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சி பெறுவதற்கு அதிக அளவில் செலவாகிறது. எனவே பள்ளி கல்வித்துறையே இந்த பயிற்சியை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், "பயிற்சியை முறையாக முடிக்கவில்லை எனக் கூறி சிறப்பாசிரியர்கள் 888 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இந்த பயிற்சி எங்களுக்கு வழங்கியிருந்தால், நாங்கள் சிறப்பாக கற்றுத் தேர்ந்திருப்போம். பள்ளிக்கல்வித்துறை பயிற்சி அளிக்காத நிலையில், சிறப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பாசிரியர்கள் நேரடியாக பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளது.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு எங்கள் அனைவருக்கும் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சிறப்பு மாணவர்களுக்கு அவர்கள் வீடு தேடி சென்றும் பாடம் எடுத்து வருகிறோம். அப்போது பல்வேறு சிரமங்களை நாங்கள் அனுபவிக்கிறோம். எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment